தாவர இயல் பெயர்: Phyllanthus emblica, Embelic Myrobalan, Euphorbiaceae, Linn.
இதன் மறு பெயர்கள்: அந்தோர், ஆமலகம், அமுதம், அந்தகோளம், அத்தகோரம்
வளரும் இடங்கள்: இந்தியாவை தாயகமாகக் கொண்ட நெல்லி சீனா, தென்கிழக்கு ஆசியப் பகுதிகளிலும் அதிகம் காணக் கிடைக்கிறது. குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரையில் காஷ்மீர் முதல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் காணக் கிடைக்கிறது.
பயன் தரும் பகுதிகள்: இலை, காய், வற்றல், வேர், பட்டை, பூ, விதை எனப் பெரும்பாலும் எல்லா பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை தான்.
பொதுவான தகவல்கள் : நெல்லி (Phyllanthus emblica) யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம் ஆகும். இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது.இது உயரமான இலையுதிர் மரமாக அறியப்படுகிறது. இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும்.
வளரியல்பு:-
நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைகள் கொத்துக், கொத்தாக அடர்த்தியாக வளரும். ஒவ்வொரு காம்பிலும் இருபுறங்களிலும் பச்சை வண்ணத்தில் இலைகள் அமைந்திருக்கும். இலைக் காம்பை ஒட்டியே சின்னஞ்சிறு வெள்ளை நிறப்பூக்கள் அரும்பும். வேனில் காலத் துவக்கத்தில் பூ ஆரம்பித்து வேனில் காலம் முடிவதற்குள் கனிவிடத் தொடங்கி விடுகிறது. மற்றொன்று தோப்பு அல்லது காட்டு நெல்லிக்காய் எனும் பெரிய அளவிலான பச்சை நெல்லிக்காய் ஆகும்.
மலைகளில் நன்றாக விளையும். மற்றைய நிலங்களில் சுமாராக விளையும். தென்னிந்தியாவில் அதிகமாகக் கிடைக்கும். இலையுதிர் மர வகையைச் சேர்ந்தது. இலைகள் நீண்டிருக்கும். அகலம் குறைவானது. இளம் மஞ்சள் நிறக் காய்களை உடைய மரம். காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகள் ஒருங்கே பெற்றது. இலையடி செதில் மிகச் சிறியதாக நீண்டு இருக்கும். பூக்கள் இலைக்கோணங்களில் கொத்தாக இருக்கும். ஆண் பூக்களும், பெண் பூக்களும் கலந்து இருக்கும். இலைகளில் மேல் பகுதியில் இருப்பவை ஆண் பூக்களாகவும், கீழ்பகுதியில் உள்ளவை பெண் பூக்களாகவும் இருக்கும். பெண் பூக்களின் எண்ணிக்கை ஆண் பூக்களின் எண்ணிக்கையை விடக் குறைவாக இருக்கும். பூ இதழ்கள் ஆறு. தலைகீழ் ஈட்டி வடிவமானது. மகரந்தக் கேசங்கள் மூன்று இணைந்திருக்கும். இணைக்கும் பகுதி சேர்ந்து கூர்மையாக இருக்கும். செங்குத்தாக வெடிக்கும். கனி ட்ரூப் வகையைச் சேர்ந்தது. வெடியாக்கனி பலவீனப் பட்டதாக இருக்கும். உருண்டை வடிவமானது. சதைப்பற்று உள்ளது, சாறு இருக்கும். விதைகள் மூன்று கோணங்கள் உடையது. விதையுறை கடினமாக இருக்கும். ஒட்டுச் செடிகள் 3 வருடங்களில் காய்க்கும். மற்றவை காய்க்க 6 வருடங்கள் கூடச் செல்லலாம். நெல்லி விதை மூலமும், ஒட்டுக் கட்டு மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் அது மிகையாகாது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது.
இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. ஆனால், முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.
அவர்கள் முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்களே! அது எப்படி என்று நாம் பார்த்தோமானால் அதற்கு அவர்களின் உணவுக் கட்டுப் பாடும், உடற்பயிற்சியும் தான் முக்கியக் காரணம் ஆக உள்ளது. முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முதுமையையும் இளமையாகக் கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால், இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவும், உடற்பயிற்சி இன்மையுமே.
இப்படி இளமையை முதுமையாக்கி உடலை நோய்களின் கூடாரமாக மாற்றியிருக்கும் இக்கால சமுதாயத்தை அன்றே உணர்ந்து என்றும் இளமையுடன் தோற்றமளிக்க தேரையர் என்ற சித்தர் தான் எழுதிய தேரன் கண்ட உண்மை என்னும் நூலில் நெல்லிக்கனியின் சிறப்பை பற்றி கீழ்க்கண்ட பாடல் மூலம் விவரிக்கிறார்.
“மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்”
பொருள் : முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிட வேண்டும். அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக பல வரலாற்று நூல்கள் மூலம் அறிகிறோம். இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும்.
நெல்லிக்கனி மூப்பை தடுக்கும் முறை:-
முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.
நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.
ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.
நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு, காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும். அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம்.
சங்க காலம் தொட்டு நெல்லிக்கனி நம் வாழ்வில் கலந்த ஒரு கனி ஆகும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்ததில் இருந்து பல புலவர்கள் பலர் நெல்லிக்கனியை பற்றிப் பாடி உள்ளனர்.
இந்த நெல்லிக்கனியில் மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம் பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது.
நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.
நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்:
* ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.
* ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
* நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.
* எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.
நெல்லிக்கனியின் மேலும் பல மருத்துவப் பயன்கள்:-
* தலைவலியால் தாக்கப்பட்டவர்கள் அல்லது தலைக் கனமாக இருப்பதாக உணர்பவர்கள் நெல்லி முள்ளி (அ) நெல்லிக்கனியை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டுக் கொண்டால் சீக்கிரத்தில் நிவாரணம் பெறலாம்.
* பயற்றம் பருப்பு மாவுடன், இந்த நெல்லி முல்லையின் பொடியையும் கலந்து, உடலில் தேய்த்துக் குளித்து வந்தால், சருமம் மழ மழப்பாகி நன்றாய் பள பளத்துக் காட்டும்.
* நெல்லிக்காய் கல்லீரலின் சீரான செயல்பாட்டிற்கு உதவும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலின் மூலை முடுக்குகளில் சேர்ந்துள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, கல்லீரல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும். மேலும் உலகின் பல்வேறு பகுதிகளில் கல்லீரல் பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
* நெல்லிக்காயை ஊறுகாயாக சாப்பிட உடலில் வீரியம் பெருகும்.
* தினமும் ஐந்து நெல்லிக்கனிகளை சாப்பிட்டு வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
* தினம் ஐந்து நெல்லிக்காயை தின்று வர, உடலின் இரத்த ஓட்டத்தை அது மேம்படுத்தும். மேலும் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால், அவற்றைத் தடுத்து, இதயத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
* நெல்லிக்காய் சாறு, தேன், எலுமிச்சம் பழச்சாறு வகைக்கு 15 மில்லி அளவு எடுத்துக் கலந்து காலையில் மட்டும் குடித்து வர மது மேகம் குணமாகும்.
* சாதாரண வயிற்றி வலி முதல் தீவிரமான வயிற்று அலற்றி வரையில் குணமாக்கும் ஆற்றல் நெல்லிக்கனிக்கு உண்டு என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
* சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் தினமும் 1 நெல்லிக் காயை சாறு பிழிந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
* பயற்றம் பருப்பு மாவுடன், இந்த நெல்லி முல்லையின் பொடியையும் கலந்து, உடலில் தேய்த்து குளித்து வந்தால், சருமம் மழ மழப்பாகி நன்றாய் பளபளத்துக் காட்டும்.
* நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், கண்களின் ரெட்டினாவை பாதுகாக்கும். இதில் வைட்டமின் சி வளமாக இருப்பதால், பார்வை மேம்படுவதோடு, கண்களில் இருந்து தண்ணீர் வருவது, கண் எரிச்சல், கண்கள் சிவப்பது போன்றவை தடுக்கப்படும்.
* நெல்லி இலையை நீரில் கைப்பிடி அளவு போட்டுக் காய்ச்சி வடி கட்டிக் கொப்பளிக்க வாய்ப்புண் குணமாகும்.
* சில நெல்லிக்காய்களை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு குழைத்து தலைக்கு தேய்த்து ஊறிய பிறகு குளித்து வந்தால் முடி உதிர்வது நின்று அடர்த்தியாக வளரும்.
* நெல்லிக்காயுடன் தாமரையின் இலை, இதழ்களையும் வைத்து அரைத்து உடம்பில் அடிபட்டு வீங்கி இருக்கும் பகுதிகளில் தடவினால் வீக்கம் வடிந்து விடும்.
* நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். மேலும் நெல்லிக்காய் மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்தும். அதிலும் நெல்லி பொடியை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
* நெல்லிக் காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தீர்த்து வைக்கும்.
* நெல்லிக்காயை தினமும் நன்கு மென்று தின்று வர ரத்தசோகை நீங்கும்.
* நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி தீர, கொட்டை நீக்கிய நெல்லிக்காயை இடித்து இரண்டு அவுன்ஸ் சாறு எடுத்து அதில் அதே அளவுக்கு தேன் கலந்து கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்து இதை கொஞ்சம் கொஞ்சமாக தினசரி காலையில் பருகி வரவும்.
* பெரு நெல்லியை வெந்நீரில் அலசி தயிரில் ஊற வைத்து சாப்பிடலாம். இதனால் உடலில் எதிர்ப்பு சக்தி, வீரியம் அதிகரிக்கும்.
* நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் ஆய்விலும் நெல்லிக்காய் சாப்பிடுவதால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடைப்படும் என்று தெரிய வந்துள்ளது.
* நெல்லிக்காய் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும். நெல்லிக்காயில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை தினமும் ஒன்று என்ற விதத்தில் உட்கொண்டு வந்தால், புதிய இரத்த செல்கள் உருவாகி, மறைமுகமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பைத் தடுக்கும்.
* சிறிதளவு நெல்லிக்காயை எடுத்துத் துண்டு துண்டாக நறுக்கிக் கொண்டு, நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காய் எண்ணெயில் போட்டு நெல்லிக்காய் கருப்பாக மாறும் வரை சட்டியில் வைக்க வேண்டும். இந்த கருத்த எண்ணெய் தலை முடி நரைப்பதை தடுக்க அருமையான மருந்து.
* அல்சர் உள்ளவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அல்சரைக் குணப்படுத்தலாம்.
* நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு அதனால் உடல் எடை குறையும்.
* முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்துக் குடிக்க வேண்டும்.
* நெல்லிக்காய் ஜூஸ் சரும பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. குறிப்பாக தினம் ஒரு நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் முகப்பரு, பிம்பிள் போன்றவை வராது.
* நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, முதுமைத் தோற்றமானது விரைவில் வராமல் தடுக்கும்.
No comments:
Post a Comment